செய்திகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக்

வாட்சன், டேரன் சமி உள்பட 36 வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்பு

Published On 2020-02-18 13:55 GMT   |   Update On 2020-02-18 13:55 GMT
ஆறு அணிகள் பங்கேற்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சியில் நாளை தொடங்கும் நிலையில், வாட்சன் உள்பட 36 வெளிநாட்டு வீரர்கள் இதில் விளையாடுகின்றனர்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால் நடத்தப்பட்டு வருகிறது. நான்கு வருடத்திற்கு முன் இந்தத் தொடர் அறிமுகமான போது வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் மண்ணில் விளையாட தயங்கினர்.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டிகளை நடத்த வேண்டிய சூழ்நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது.  அதன்பின் மெல்ல மெல்ல பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டியை நடத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக 2020 சீசனில் எல்லா ஆட்டத்தையும் பாகிஸ்தான் மண்ணில் நடத்துகிறது.

இந்தத் தொடர் நாளை கராச்சியில் தொடங்குகிறது. இதில் வாட்சன், டேரன் சமி உள்பட 36 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார். மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற இது மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என பாகிஸ்தான் நம்புகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி வாசிம் கான் கூறுகையில் ‘‘வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வருவது எங்களுக்கு மிகப்பெரிய போனஸ். சர்வதேச போட்டிக்கான மிகப்பெரிய முன்னேற்றம். ஏனென்றால், வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் நான்கு வாரங்கள் முதல் ஐந்து வாரங்கள் வரை தங்கியிருந்து பாதுகாப்பான முறையில் விளையாடலாம் என நம்புகிறார்கள்’’ என்றார்.

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது இலங்கை அணி சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன்பின் பாகிஸ்தான் செல்ல வெளிநாட்டு அணிகள் மறுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News