செய்திகள்
வெற்றியை கொண்டாடும் ஆஸ்திரேலியா பெண்கள் அணி

பெண்கள் கிரிக்கெட்: முத்தரப்பு டி20 இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Published On 2020-02-12 06:03 GMT   |   Update On 2020-02-12 06:03 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணிகளுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இரு அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெத் மூனி ஆட்டமிழக்காமல் 71 (54 பந்துகள்) ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆனார்.  அதன் பின்னர் ஸ்மிர்தி மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் பொறுமையாக ஆடினர். சிறப்பாக விளையாடிய ஸ்மிர்தி மந்தனா அரைசதம் கடந்தார். அவர் 37 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெமியா ரொட்ரிகஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அருந்ததி ரெட்டி போன்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 144 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 
Tags:    

Similar News