செய்திகள்
ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய்

U19 உலக கோப்பையில் 400 ரன் குவித்த ஜெய்ஷ்வால்: பிஷ்னோய் 17 விக்கெட் வீழ்த்தினார்

Published On 2020-02-10 10:57 GMT   |   Update On 2020-02-10 10:57 GMT
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இளையோர் உலக கோப்பையில் 400 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் முதல் இடம் பிடித்தார். பிஷ்னோய் 17 விக்கெட் வீழ்த்தினார்.
19 வயதுக்குட்பட்ட ஜூனியர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்திடம் தோற்று 5- வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியனான இந்தியா முதலில் விளையாடி 47.2 ஓவர்களில் 177 ரன்னில் சுருண்டது.

பின்னர் ஆடிய வங்காளதேசம் 41 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி வங்காளதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி முதல் முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப் பற்றியது.

இந்த போட்டி தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய வீரர்களே சாதித்தனர். ஜெய்ஸ்வால் 6 ஆட்டத்தில் 400 ரன் குவித்து முதல் இடத்தை பிடித்தார். சராசரி 133.33 ஆகும். அவர் ஒரு சதமும், 4 அரை சதமும் அடித்திருந்தார். இதனால் தொடர் நாயகன் விருது கிடைத்தது. ரசந்தா (இலங்கை) 284 ரன்னும், பார்சன் (தென் ஆப்பிரிக்கா) 265 ரன்னும் எடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய வீரர் ரவி பிஷ்னோய் 17 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். 5 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஆப்கானிஸ்தான் வீரர் ஹபாரி, கனடாவை சேர்ந்த அகில்குமார் தலா 16 விக்கெட் கைப்பற்றினார்கள்.
Tags:    

Similar News