செய்திகள்
ரகானே

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிராக சதம் அடித்த ரகானே: போட்டி டிராவில் முடிந்தது

Published On 2020-02-10 09:16 GMT   |   Update On 2020-02-10 09:16 GMT
நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஷுப்மான் கில்லை தொடர்ந்து ரகானேவும் சதம் அடித்தார்.
நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள்  கொண்ட 2-வது டெஸ்ட் லிங்கோனில் நடைபெற்றது.

கடந்த 7-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து ‘ஏ’ டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மிட்செல் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சிராஜ், சந்தீப் வாரியர், அஸ்வின், ஆவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 111 ரன்னாக இருக்கும்போது விஹாரி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷுப்மான் கில் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷுப்மான் கில் 148 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் புஜாரா 88 பந்தில் அரைசதம் அடித்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ 1 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்திருந்தது. ஷுப்மான் கில் 107 ரன்னுடனும், புஜாரா  52 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. புஜாரா 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 136 ரன்கள் சேர்தார்.

அதன்பின் வந்த ரகானே, விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விஜய் சங்கர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். ரகானே சதம் அடித்தார். இந்தியா 109 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 467 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது. ரகானே 101 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஏற்கனவே முதல் போட்டியும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News