செய்திகள்
பும்ரா - ரவி சாஸ்திரி

ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் நியூசிலாந்து...ஆறுதல் வெற்றி பெரும் முனைப்பில் இந்தியா - நாளை கடைசி போட்டி

Published On 2020-02-10 13:00 IST   |   Update On 2020-02-10 13:00:00 IST
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மவுண்ட் மவ்கானுவில் நாளை நடக்கிறது.
மவுண்ட் மவ்கானு:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப் பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

ஆனால் முதல் 2 ஆட்டத்தில் தோற்று ஒரு நாள் தொடரை இழந்தது. ஹேமில்டனில் நடந்த முதல் ஆட்டதில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 22 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மவுண்ட் மவ்கானுவில் நாளை (11-ந் தேதி) நடக்கிறது.

இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

முதல் போட்டியில் 348 ரன் குவித்தும் வெற்றியை பெற முடியவில்லை. இந்த தோல்விக்கு பந்து வீச்சாளர்களே காரணம். 2 -வது ஆட்டத்தில் 274 ரன் இலக்கை எடுக்க முடியவில்லை. இதற்கு பேடஸ்மேன்களே பொறுப்பு.

ஆறுதல் வெற்றி அவசியம் என்பதால் நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.

கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் மாற்றம் செய்யப்பட்டது. முகமது ‌ஷமி, குல்தீப் யாதவுக்கு பதிலாக நவ்தீப் சைனி, சாஹல் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது பேட்டிங்கில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ரி‌ஷப் பண்ட், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே ஆகியோருக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரோகித் சர்மா இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரேயாஸ் அய்யர் இந்த தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 155 ரன் எடுத்துள்ளார். கேப்டன் விராட்கோலி, ஜடேஜா, ராகுல் ஆகியோரும் நிலையாக விளையாடி வருகிறார்கள்.

பந்து வீச்சாளர்களில் பும்ராவின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்தியாவின் முதல் நிலை வேகப்பந்து வீரரான அவர் 20 ஓவர் வீசி 117 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை.

நாளைய ஆட்டத்திலாவது அவர் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு வேளை அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் முகமது ‌ஷமி இடம் பெறலாம். இதேபோல ‌ஷர்துல் தாக்கூரும் நேர்த்தியாக வீச வில்லை. அவர் அல்லது பும்ரா கழற்றிவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் நாளைய போட்டியிலாவது விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் ஆடாவிட்டால் டாம் லாதம் கேப்டன் பொறுப்பில் நீடிப்பார்.

முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 2 போட்டியிலும் வெற்றிக்கு அவரே காரணமாக திகழ்ந்தார். ஒரு சதம். ஒரு அரை சதத்துடன் 182 ரன் குவித்து இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.

இதேப்போல நிக்கோலஸ், குப்தில், டாம்லாதம் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக இருக்கிறார்கள். பந்து வீச்சில் சவுத்தி, பென்னட், ஜேமிசன் ஆகியோர் முத்திரை பதிக்கக்கூடியவர்கள்.

இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 109 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டை ஆனது.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Similar News