செய்திகள்
ஷுப்மான் கில்

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது டெஸ்டிலும் சதம் விளாசிய ஷுப்மான் கில்

Published On 2020-02-09 12:36 GMT   |   Update On 2020-02-09 12:36 GMT
நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த ஷுப்மான் கில், 2-வது டெஸ்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள்  கொண்ட 2-வது டெஸ்ட் லிங்கோனில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து ‘ஏ’ டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்திருந்தது. க்ளெவர் 46 ரன்களுடனும், மிட்செல் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்றைய 2-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. க்ளெவர் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் மிட்செல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து ‘ஏ’ 9 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மிட்செல் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சிராஜ், சந்தீப் வாரியர், அஸ்வின், ஆவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 111 ரன்னாக இருக்கும்போது விஹாரி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷுப்மான் கில் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷுப்மான் கில் 148 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் புஜாரா 88 பந்தில் அரைசதம் அடித்தார்.

இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இந்தியா ஏ 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்துள்ளது. ஷுப்மான் கில் 107 ரன்னுடனும், விஹாரி 59 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஷுப்மான் கில் முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்திருந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் இறங்க வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News