செய்திகள்
ஷான் மசூத், பாபர் அசாம்

ராவல் பிண்டி டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது

Published On 2020-02-09 09:53 GMT   |   Update On 2020-02-09 09:53 GMT
பாபர் அசாம், ஷான் மசூத் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க வங்காளதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேசம் அணி 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் சிறப்பான தொடக்கம் அளித்தார். அவருக்கு பாபர் அசாம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். ஷான் மசூத் 100 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நேற்றைய 2-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 143 ரன்னுடனும், ஆசாத் ஷபிக் 60 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் ஆசம் நேற்றைய 143 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் மேலும் ஐந்து ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன்பின் வந்த ஹாரிஸ் சோஹைல் 75 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 122.5 ஓவரில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்காளம்தேசம் அணி சார்பில் அபு ஜெயத், ருபெல் ஹொசைன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News