செய்திகள்
அரை சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் - நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி காலிறுதியில் நுழைந்தது

Published On 2020-01-24 17:13 GMT   |   Update On 2020-01-24 17:13 GMT
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, காலிறுதியில் நுழைந்தது.
16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யன்ஷ் சக்சேனா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர்.

போட்டியின் 23-வது ஓவர் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்திருந்தது.

மழை நிற்காத நிலையில், டக்வொர்த் லூவிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 23 ஓவரில் 192 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர்.

தொடக்க ஆட்டக்காரர் ரியு மரியுஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இதனால்,  நியூசிலாந்து அணி 21 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், காலிறுதிக்குள் நுழைந்தது.

இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டும், அதர்வா அன்கோலேகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

28-ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News