செய்திகள்
கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர்

முதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா

Published On 2020-01-24 10:41 GMT   |   Update On 2020-01-24 10:41 GMT
ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து மார்ட்டின் கப்தில் (30), கொலின் முன்றோ (59), கேன் வில்லியம்சன் (51), டெய்லர் (54 நாட்அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்தியாவுக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 6 பந்தில் ஒரு சிக்சருடன் 7 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். இவருடன் இணைந்து கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் 65 ரன்கள் சேர்த்தது. 8.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

கேஎல் ராகுல் 23 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 10 ஓவரில் 115 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 27 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 32 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அப்போது இந்தியா 11.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருந்தது. கோலி ஆட்டமிழந்தபோது இந்தியாவின் வெற்றிக்கு 53 பந்தில் 83 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 5 பவுணடரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுக்க இந்தியா 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி 4 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 3 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்தார். நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 4 ஓவர்களில் 48 ரன்களும், சான்ட்னெர் 50 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

2-வது போட்டி இதே மைதானத்தில் நாளைமறுதினம் நடக்கிறது.
Tags:    

Similar News