செய்திகள்
மார்கஸ் ஸ்டோய்னிஸ்

பிக் பாஷ் டி20 லீக்: 79 பந்தில் 147 ரன்கள் குவித்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் சாதனை

Published On 2020-01-12 14:51 GMT   |   Update On 2020-01-12 14:51 GMT
பிக் பாஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 147 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தார்.
பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்கில் மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் - கார்ட்ரைட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானமாகவே விளையாடினர்.

மெல்போர்ன் ஸ்டாஸ் 7.1 ஓவரில்தான் 50 ரன்னைத் தொட்டது. ஸ்டோய்னிஸ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் புயல்வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டோய்னிஸ் சிக்சர் மழை பொழிந்தார்.

இதனால் அடுத்த 26 பந்தில் (11.3) மெல்போர்ன் ஸ்டார்ஸ் 100 ரன்னைத் தொட்டது. 15.1 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.

கார்ட்ரைட் 36 பந்தில் அரைசதம் அடிக்க ஸ்டோய்னிஸ் 60 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஸ்டோய்னிஸ் 79 பந்தில் 13 பவுண்டரி, 8 சிக்சருடன் 147 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 19 பந்தில் 47 ரன்கள் அடித்தார்.

கார்ட்ரைட் 40 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிக் பாஷ் டி20 லீக்கில் ஸ்டோய்னிஸ் அடித்த 147 ரன்கள்தான் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் டி'ஆர்கி ஷார்ட் 69 பந்தில் 122 ரன்களும், லூக் ரைட் 60 பந்தில் 117 ரன்களும், வெதரால்டு 70 பந்தில் 115 ரன்களும், பென் மெக்டெர்மோட் 52 பந்தில் 114 ரன்களும் அடித்துள்ளனர்.
Tags:    

Similar News