செய்திகள்
ஜேம்ஸ் பட்டின்சன்

என்னுடைய சிறந்த பந்து வீச்சு வெளிப்படும்: இந்திய டெஸ்ட் அணிக்கு ஜேம்ஸ் பட்டின்சன் எச்சரிக்கை

Published On 2019-12-31 12:42 GMT   |   Update On 2019-12-31 12:42 GMT
நியூசிலாந்துக்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் பேட்டின்சன், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் பட்டின்சன். 29 வயதாகும் இவர் கடந்த 2011-ல் பிரிஸ்பேனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 21 வயதில் களம் இறங்கிய பட்டின்சன், அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட் (முதல் இன்னிங்சில் 1, 2-வது இன்னிங்சில் 5) வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இதனால் ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலி பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். ஆகவே, இவரால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

பறவைகள் சீசனுக்கு வந்து செல்வது போன்று அவ்வப்போது கிரிக்கெட்டில் தென்படுவார். இதனால் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் விளையாடிய பட்டின்சன் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்திருந்தார். மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

அடுத்த வருடம் கோடைக்காலத்தில் இந்தியா ஆஸ்திரேலியா செல்கிறது. கடந்த முறை இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அப்போது ஆஸ்திரேலியா முழு வலிமையான அணியாக இல்லை.

தற்போது ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருடன் வலிமையான அணியாக திகழ்கிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை தக்க வைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை வென்றுள்ளது.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தொடர் இந்தியாவுக்கு எளிதானதாக இருக்காது. தொடரை கைப்பற்ற இந்தியா கடுமையாக போராட வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக எனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் சவால் விட்டுள்ளார்.



இதுகுறித்து ஜேம்ஸ் பேட்டின்சன் கூறுகையில் ‘‘எனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்காக முழு திறமையையும் வலுப்படுத்திக் கொள்ள எனது உடல் ஒத்துழைக்கும் என நம்புகிறேன்.

எனது இலக்கை அடைவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன். தற்போது எனக்கு 29 வயதுதான் ஆகிறது. எனக்கு போதுமான அளவுக்கு நேரம் இருக்கிறது. அடுத்த வருடம் இதே சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News