செய்திகள்
இன்சமாம்

கங்குலி அளித்த உணவை சாப்பிட்டு இருக்கிறேன்- கனேரியா குற்றச்சாட்டுக்கு இன்சமாம் பதிலடி

Published On 2019-12-30 06:18 GMT   |   Update On 2019-12-30 06:18 GMT
கிரிக்கெட்டில் மதம் கலக்கவில்லை, கங்குலி அளித்த உணவை சாப்பிட்டு இருக்கிறேன் என்று கனேரியா சொன்ன குற்றச்சாட்டுக்கு இன்சமாம் பதிலடி கொடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் டேனிஷ் கனேரியா. இந்து மதத்தை சேர்ந்த இவர் பாகிஸ்தான் அணிக்காக 2000 முதல் 2010-ம் ஆண்டு வரை 61 டெஸ்ட், 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்துக்காக இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கனேரியா விளையாடிய கால கட்டத்தில் மத ரீதியான பாகுபாடு காட்டப்பட்டது என்றும், அவருடன் ஒன்றாக அமர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் சாப்பிட தயங்கினர் என்றும், அவர் அளித்த உணவை உண்ண மறுத்தனர் என்றும் அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் பரபரப்பான குற்றச் சாட்டை கூறி இருந்தார்.

சோயிப் அக்தர் பேசியது அனைத்தும் உண்மை. தன்னை பல வீரர்கள் பாகுபாடு காட்டி நடத்தினார்கள் என்றும், சில வீரர்கள் ஆதரவு அளித்தனர் என்றும் கனேரியா தெரிவித்து இருந்தார்.

கனேரியாவின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மறுத்து பதிலடி கொடுத்து உள்ளார். பாகிஸ்தானியர்களுக்கு பெரிய மனது இருக்கிறது என்றும், கிரிக்கெட்டில் மதம் கலக்கவில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

கிரிக்கெட்டில் ஒருபோதும் மதம் கலக்கவில்லை. எனது தலைமையின் கீழ் கனேரியா பல போட்டிகளில் விளையாடி உள்ளார். சக்லைன் முஸ்தாக்கை அணியில் சேர்ப்பதை காட்டிலும் கனேரியாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அணி தேர்வாளர்களிடம் நான் கூறி இருக்கிறேன். பாகிஸ்தானின் எதிர்கால பந்து வீச்சாளர்களாக இருக்க போகிறார் என்று அவருக்கு வாய்ப்புகள் அளித்தோம்.

தற்போது அவர் கூறிய குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. எனக்கு தெரிந்து அது போன்று யாரும் அணியில் நடந்து கொண்டது இல்லை.

ஒருவீரர் முஸ்லிம் இல்லை என்பதற்காக அவரை பாகுபாடு காட்டி நடத்தவும் இல்லை. அது போன்ற சம்பவம் நடந்தது இல்லை. இதற்கு முன்பு விளையாடிய எந்த வீரர்களிடமும் பாகுபாடு காட்டியது இல்லை.

பாகிஸ்தான் மக்களுக்கு பெரிய மனது இருக்கிறது. ஒவ்வொருவரையும் திறந்த மனதுடன் ஏற்பார்கள். பாகிஸ்தான் மக்களுக்கு சிறிய இதயம். அதனால் தான் இவ்வாறு நடத்துகிறார்கள் என சிலர் கூறுவதை நான் ஏற்க மாட்டேன்.

இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு 2004-ம் ஆண்டு பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தான் மக்கள் இன்முகத்துடனும், அன்புடனும் வரவேற்றார்கள்.

எங்குவேண்டுமானாலும் சென்று இந்திய வீரர்கள் சாப்பிட்டார்கள். ஷாப்பிங் செய்தார்கள். டாக்சியில் சென்றார்கள். ஆனால் யாரும் இந்திய வீரர்களிடம் பணம் வாங்க வில்லை.

அடுத்த ஒரு ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்றது. அப்போது நான்தான் கேப்டனாக இருந்தேன். பாகிஸ்தான் மக்கள் எப்படி வரவேற்றார்களோ அது போன்று அன்புடனும், பாசத்துடனும் இந்திய மக்களும், ரசிகர்களும் நடந்து கொண்டார்கள்.

அவர்கள் வீட்டு கதவுகளை திறந்து வைத்து எங்களுக்கு வரவேற்பு அளித்தார்கள். விருந்தினராக தங்கி செல்ல வேண்டும் என்று அன்புடன் அழைத்தார்கள். நாங்கள் சாப்பிட்ட உணவுக்கு எங்களிடம் பணம் வாங்கவும் மறுத்து விட்டனர்.

இரு நாட்டு மக்களிடையே அன்பு நிறைந்துள்ளது. எனவே கனேரியா சொல்வது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. நான் கேப்டனாக இருந்த காலத்தில் அவர் மீது பாகுபாடு காட்டப்பட வில்லை.

2005-ம் ஆண்டு இந்திய பயணத்தின் போது கொல்கத்தாவில் கங்குலியின் ரெஸ்டாரண்டுக்கு சென்றோம். நானும், தெண்டுல்கரும் இந்த உணவு விடுதியை திறந்து வைத்தோம்.

எனக்காக கங்குலி அனுப்பி வைத்த உணவுகளை நான் சாப்பிட்டேன். கங்குலி அளித்த உணவுகளை நாங்கள் சாப்பிட்ட போது கனேரியா அளித்த உணவுகளை எவ்வாறு மறுத்து இருப்போம்.

இவ்வாறு இன்சமாம் கூறி உள்ளார்.

இதற்கிடையே தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று சோயிப் அக்தர் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறும்போது, “கனேரியா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு சில வீரர்கள் மட்டுமே புறக்கணித்தனர். ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியையும் நான் குற்றம் சாட்டவில்லை. பாகிஸ்தானில் மத ரீதியான பாகுபாடு காட்டப்படுவதில்லை. சூதாட்டத்தில் ஈடுபட்டதால்தான் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது” என்றார்.

Tags:    

Similar News