செய்திகள்
மகேந்திர சிங் டோனி - தி லெஜண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்றழைக்கப்பட்ட மகேந்திரசிங் டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
புதுடெல்லி:
உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டுக்கே நம் நாட்டில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். கவாஸ்கர், கபில் தேவ், கங்குலி, சச்சின் டெண்டுல்கர், டிராவிட், சேவாக், இன்னும் எத்தனையோ வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினின் சாதனைகளைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 6 வது விக்கெட்டாக களம் இறங்கிய டோனி அன்றைய போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலேயே ரன் - அவுட் ஆனார்.
அதன்பிறகு நடந்த பாகிஸ்தான் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடி ரசிகர்கள் பாராட்டைப் பெற்றார். சிக்சர்கள் விளாசுவதில் சிறந்தவரான டோனியின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் 183 (நாட் -அவுட்) ஆகும். 2007ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டித்தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறிய பின்னர் கேப்டனாக பொறுப்பேற்றார். அதே ஆண்டில் முதல் முறையாக சர்வதேச (ஐ.சி.சி) 20 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் அறிமுகமானது.
அனுபவம் இல்லாத டோனி தலைமையிலான அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் ஐ.சி.சி டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியது. அதன் பின்னரும் டோனி தலைமையிலான அணி பல்வேறு வெளிநாட்டுத் தொடர்களை வென்று சாதனை படைத்தது.
2011ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறந்திருக்கமாட்டார். இலங்கை அணிக்கெதிரான அந்த போட்டியில் கவுதம் கம்பீர் 97 ரன்கள், மற்றும் டோனியின் 91 ரன்களால் இந்தியா அணி 28 ஆண்டுகள் கழித்து கோப்பையைக் கைப்பற்றியது. சிக்சருடன் முடித்து வைத்த டோனியை சச்சின், சேவாக், அந்த தொடரின் ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் அனைவரும் கட்டித்தழுவியது மறக்க முடியாத நிகழ்வாகும்.
அதேபோல் ஐ.சி.சி நடத்தும் சாம்பியன் டிராபி கோப்பையையும் டோனி தலைமையிலான அணி 2013ம் ஆண்டு வென்று சாதனை படைத்தது. அதன் பின்னர் ஐ.சி.சி யின் மூன்று விதமான போட்டிகளிலும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என அழைக்கப்பட்டார் டோனி. சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டார். ஐ.பி.எல் தொடர்களிலும் 3 முறை டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கோப்பையை வென்றுள்ளது.
2015 உலகக்கோப்பையில் தோல்வியை தழுவிய பின்னர் டோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்த ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டோனி ரன் அவுட் ஆனார். டோனி களத்தில் நின்றிருந்தால் அன்றைய ஆட்டம் நமது வசமாயிருக்கும் என நினைக்காத இந்தியர்களே இல்லை எனலாம்.
அதன் பின்னர் அவரது ஓய்வு குறித்து கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. 38 வயதான டோனி இதுவரை 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் , 98 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 10,773 , 4,432 மற்றும் 1,617 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பராக 829 விக்கெட்டுகளை வீழ்த்த (கேட்சுகள் மற்றும் ஸ்டெம்பிங்குகள்) காரணமாக இருந்துள்ளார். மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்பவர் எனவும் அழைக்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 229 சிக்சர்கள் விளாசியுள்ளார்
இன்றுடன் அவரது கிரிக்கெட் பயணம் தொடங்கி 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே டோனி ஓய்வை அறிவித்து விட்டார். ஆனால் அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறிதான்.