செய்திகள்
துர்கி முகமது அல்குதார்

நடுவர் மீது இனவெறி புகார் - இந்திய கால்பந்து சம்மேளனம் விசாரணை

Published On 2019-12-18 05:24 GMT   |   Update On 2019-12-18 05:24 GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் போது இனவெறியை குறிக்கும் வகையில் திட்டியதாக நடுவர் மீது புகார் வந்ததையடுத்து இந்திய கால்பந்து சம்மேளனம் விசாரணை நடத்தி வருகிறது.
புதுடெல்லி:

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியின் போது மும்பை சிட்டி அணியின் நடுகள வீரர் செர்ஜி கெவினை (காபோன்) நடுவர் துர்கி முகமது அல்குதார் (சவுதி அரேபியா) இனவெறியை குறிக்கும் வகையில் குரங்கு என்று திட்டியதாக மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா புகார் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இனவெறியை குறிப்பிடும் செயல்கள் எதுவும் போட்டியில் இருக்கக்கூடாது என்ற கொள்கையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது.

மும்பை அணியின் பயிற்சியாளர் அளித்த புகார் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தவறு நடந்து இருந்தது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News