செய்திகள்
5 விக்கெட் வீழ்த்திய அஷ்வின்

ரஞ்சி டிராபி 2வது சுற்று - இமாசல பிரதேசத்தை 158 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு

Published On 2019-12-17 13:46 GMT   |   Update On 2019-12-17 13:46 GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 2வது சுற்றில் இமாசல பிரதேசம் அணியை முதல் இன்னிங்சில் 158 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு அணி.
திண்டுக்கல்:
 
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - இமாசல பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, இமாசல பிரதேசம் அணி முதலில் களமிறங்கியது. தமிழ்நாடு அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இமாசல் அணி வீரர்களை வெளியேற்றினர்.

இதனால், இமாசல பிரதேசம் அணி 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து இறங்கிய ஆகாஷ் வசிஷ்ட் மற்றும் மயங்க் தகார் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதனால் அந்த அணி 130 ரன்களை கடந்தது.

இறுதியில் இமாசல பிரதேசம் அணி 71.4 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகாஷ் வசிஷ்ட் 35 ரன்களும், மயங்க் தகார் 33 ரன்களும், சுமித் வர்மா 30 ரன்களும் எடுத்தனர்.

தமிழ்நாடு சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தமிழ்நாடு அணி களமிறங்கியது. முதல் நாள் முடிவில் தமிழக அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News