செய்திகள்
விராட் கோலி

சொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை

Published On 2019-12-12 05:54 GMT   |   Update On 2019-12-12 05:54 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் 70 ரன்கள் அடித்ததன் மூலம் சொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று கேப்டன் விராட்கோலி (70 ரன்), துணை கேப்டன் ரோகித்சர்மா (71 ரன்), லோகேஷ் ராகுல் (91 ரன்) ஆகிய 3 வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

3 பேட்ஸ்மேன்களும் 70 ரன்னுக்கு மேல் ஒரு இன்னிங்சில் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

கோலியும், ரோகித்தும் அபாரமாக ஆடியதால் இருவரும் 20 ஒவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சமநிலையில் உள்ளனர். கோலி 70 இன்னிங்சில் 2633 ரன்னும், ரோகித்சர்மா 96 இன்னிங்சில் 2633 ரன்னும் எடுத்துள்ளனர். கோலி சதம் அடித்தது இல்லை. 24 அரை சதம் எடுத்துள்ளார். ரோகித்சர்மா 4 சதமும், 19 அரை சதமும் அடித்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் 6-வது ரன்னை தொட்ட போது சொந்த மண்ணில் 1000 ரன் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை கோலி படைத்தார். 14-வது ஓவரில் ஹைடன் வீசிய பந்தை சிக்சர் அடித்து இந்த சாதனையை புரிந்தார்.

இதற்கு முன்பு சர்வதேச அளவில் இரண்டு வீரர்கள் மட்டுமே 20 ஓவரில் சொந்த மண்ணில் 1000 ரன்னை எடுத்து உள்ளனர். நியூசிலாந்தை சேர்ந்த மார்ட்டின் குப்தில் 1430 ரன்னும், காலின் முன்ரே ஆயிரம் ரன்னும் எடுத்து உள்ளனர்.

கோலி 21 பந்தில் அரை சதத்தை தொட்டார். அவரது அதிவேக அரை சதம் இதுவாகும். இந்தியாவின் 5-வது அதிவேக அரை சதமாகும்.

யுவராஜ்சிங் 3 முறையும் (12 பந்து, 20 பந்து, 20 பந்து), காம்பீர் ஒரு முறையும் (19 பந்து) அரை சதத்தை அதிவேகத்தில் எடுத்து இருந்தனர்.
Tags:    

Similar News