செய்திகள்
வில்லியம்சன் - டிம் பெய்ன்

நியூசிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டி - டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

Published On 2019-12-12 05:15 GMT   |   Update On 2019-12-12 05:15 GMT
நியூசிலாந்து அணிக்கெதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பெர்த்:

3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக பெர்த்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மின்னொளியின் கீழ் நடக்கும் இந்த டெஸ்டில் பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பந்து) பயன்படுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆடியுள்ள 6 பிங்க் பந்து டெஸ்டிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த டெஸ்டிலும் அவர்களின் ஆதிக்கம் தொடர வாய்ப்புள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் பாகிஸ்தானை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா, தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 335 ரன்கள் குவித்து சாதனை படைத்தது நினைவிருக்கலாம். அதே அணி அப்படியே இந்த போட்டியிலும் அடியெடுத்து வைக்கிறது.

உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடுவது இது 13-வது முறையாகும். இதில் 1985-ம் ஆண்டில் மட்டும் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. தற்போது எந்த வித பயிற்சி ஆட்டமும் இல்லாமல் நேரடியாக ஆஸ்திரேலியாவின் தாக்குதலை எதிர்கொள்வது மனரீதியாக நியூசிலாந்துக்கு கடினமாக அமையும்.

பெர்த் ஆடுகளத்தில் வேகத்துடன் கூடிய பவுன்ஸ் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால் ஆடுகளத்தில் வெடிப்பு சீக்கிரம் உண்டாகும். பிங்க் பந்தின் தாக்கமும் இருக்கும். இத்தகைய சவால்களை நியூசிலாந்து எப்படி சமாளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், வாட்லிங், கிரான்ட்ஹோம், நிகோல்ஸ், டாம் லாதம் ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளதால் அந்த அணியினர் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்ற வகையிலும் இந்த தொடர் கவனத்தை ஈர்க்கிறது. அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் 40 புள்ளிகள் கிடைக்கும்.

இந்நிலையில் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பெய்ன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர் ஆடி வருகின்றனர்.
Tags:    

Similar News