செய்திகள்
பாகிஸ்தான் - இலங்கை டெஸ்ட் போட்டி

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி - இலங்கை அணி பேட்டிங்

Published On 2019-12-11 05:19 GMT   |   Update On 2019-12-11 05:19 GMT
பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ராவல்பிண்டி:

கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் இன்று தொடங்கியது.

இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது.

பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய போது லாகூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. அந்த அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடி வந்தது.

இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மட்டும் பாகிஸ்தான் சென்று ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடின. ஆனால் டெஸ்ட் போட்டி நடைபெறாமல் இருந்தது.

பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் டெஸ்டில் விளையாடி வந்தது. தற்போதுதான் பாகிஸ்தான் அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆடியது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்று விடாமல் இருக்க ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.

உணர்ச்சிபூர்வமான இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் பெருமளவில் திரண்டு ஸ்டேடியத்திற்கு வந்தனர்.
Tags:    

Similar News