செய்திகள்
இந்திய கைப்பந்து அணி வீரர்கள்

தெற்காசிய விளையாட்டு - இந்தியாவுக்கு ஒரே நாளில் 40 பதக்கம்

Published On 2019-12-04 07:42 GMT   |   Update On 2019-12-04 07:42 GMT
தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கம் கிடைத்துள்ளது.
காத்மாண்டு:

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மாண்டு போக்ஹராவில் நடந்து வருகிறது.

இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் பங்கேற்கின்றன.

நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 40 பதக்கம் கிடைத்தது.

துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவில் தங்கம் கிடைத்தது. மெஹுலிகோஸ் தனிநபர் பிரிவில் 253 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். ஆடவர் தனிநபர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் சைன் சிங் முதலிடத்தை பிடித்தார்.

இதே போல் சென்டர் பையர் பிரிஸ்டல் பிரிவில் யோகேஷ்சிங், குர்ப்ரீத் சிங் ஆகியோர் தங்கம் வென்றனர்.

தடகளத்தில் 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 11.8 வினாடியில் கடந்தார்.

இதேபோல உயரம் தாண்டுதலில் ஜிஸ்னா மேத்யூ தங்கம் வென்றார்.

ஆண்கள் கைப்பந்து பிரிவில் தங்கப்பதக்கம் கிடைத்தது. இந்திய அணி இறுதிப்போட்டியில் 20-15, 25-15, 25-17, 29-27 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

பெண்கள் கைப்பந்து பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி 25-17, 23-25, 21-25, 25-20, 15-6 என்ற செட் கணக்கில் நேபாளத்தை கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

டேபிள் டென்னிஸ் இரு பிரிவிலும் தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் நேபாளத்தையும், பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையையும் வீழ்த்தியது.

டேக்வாண்டோ மகளிர் 57 கிலோ பிரிவில் காஷிஸ் மாலிக் தங்கம் வென்றார்.

நேற்றைய போட்டி முடிவில் நேபாளம் 23 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் ஆக மொத்தம் 46 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா 17 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 42 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. இலங்கை 48 பதக்கத்துடன் 3-வது இடத்திலும் (5 தங்கம், 15 வெள்ளி, 28 வெண்கலம்) உள்ளன.

பாகிஸ்தான் 4-வது இடத்திலும், வங்காளதேசம் 5-வது இடத்திலும், மாலத்தீவு 6-வது இடத்திலும், பூடான் 7-வது இடத்திலும் உள்ளன.
Tags:    

Similar News