செய்திகள்
ஜோ ரூட், ரோரி பேர்ன்ஸ்

ஜோ ரூட்டால் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 269: முன்னிலை பெற போராட்டம்

Published On 2019-12-01 09:07 GMT   |   Update On 2019-12-01 09:07 GMT
ஹாமில்டன் டெஸ்டில் ஜோ ரூட், ரோரி பேர்ன்ஸ் சதமடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து டாம் லாதமின் சதத்தால் 375 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கட் இழப்பிற்கு 39 ரன்கள் சேர்த்திருந்தது. ரோரி பேர்ன்ஸ் 24 ரன்னுடனும், ஜோ ரூட் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோரி பேர்ன்ஸ், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த விக்கெட்டை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் எளிதாக பிரிக்க முடியவில்லை.

இதனால் இருவரும் சதம் அடித்தனர். இங்கிலாந்தின் ஸ்கோர் 201 ரன்னாக இருக்கும்போது ரோரி பேர்ன்ஸ் 101 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 26 ரன்னில் வெளியேறினார். ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட் 114 ரன்களுடனும், போப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இங்கிலாந்து 106 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஜோ ரூட் நாளை சிறப்பாக விளையாடி இங்கிலாந்து 100 ரன்களுக்கு மேல் முன்னிலை வகித்தால் இந்த டெஸ்டில் வெற்றிக்காக போராடும்.
Tags:    

Similar News