செய்திகள்
அசாத் ஷபிக்

2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம் சிறப்பான ஆட்டம்

Published On 2019-11-15 11:57 GMT   |   Update On 2019-11-15 11:57 GMT
கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் நாளில் 7 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என வென்றது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் முடிவு செய்தது. முதல் பயிற்சி ஆட்டம் கடந்த 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்தது. ஆசாத் ஷபிக், பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். மேலும் எதிரணியை 122 ரன்னில் சுருட்டியது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் கொண்ட 2-வது பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 44 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து வந்த ஷான் மசூத் 76 ரன்கள் குவித்தார். முதல் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆசாத் ஷபிக் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேபோல் பாபர் அசாம் 63 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் சேர்த்துள்ளது. ஆசாத் ஷபிக் 101 ரன்களுடனும், காஷிஃப் பாத்தி 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்தடுத்த போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டை ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கிறது.
Tags:    

Similar News