செய்திகள்
ஷாகிப் அல் ஹசன்

ஷகிப் அல் ஹசன் - சூதாட்ட தரகர் இடையே நடந்த உரையாடல் என்ன?

Published On 2019-10-31 05:16 GMT   |   Update On 2019-10-31 05:16 GMT
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆணிவேராக விளங்கிய ஷகிப் அல்-ஹசனுடன், சூதாட்ட தரகர் ‘வாட்ஸ் அப்’ மூலம் பேசிய விவரத்தை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆணிவேராக விளங்கிய ஷகிப் அல்-ஹசனுடன், சூதாட்ட தரகர் தீபக் அகர்வால் ‘வாட்ஸ் அப்’ மூலம் பேசிய விவரத்தை ஐ.சி.சி. வெளியிட்டு இருக்கிறது. ஷகிப் அல்-ஹசனின் செல்போன் நம்பரை அவருடைய நண்பர் மூலம் வாங்கிய சூதாட்ட தரகர் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முதல்முறையாக அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஷகிப் அல்-ஹசன் வங்காளதேச பிரிமியர் லீக் போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த சமயத்தில் வங்காளதேச பிரிமியர் லீக் போட்டியில் விளையாடிய மற்ற வீரர்களின் செல்போன் நம்பரை கேட்டு இருக்கிறார். அதன் பிறகு இருவர் இடையே பலமுறை உரையாடல் நடந்து இருக்கிறது.

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த இலங்கை, ஜிம்பாப்வே, வங்காளதேச அணிகள் இடையிலான முத்தரப்பு தொடரில் ஷகிப் அல்-ஹசன் ஆடிய போதும் அந்த சூதாட்ட தரகர் தொடர்பு கொண்டுள்ளார். அதில் ஜனவரி 19-ந் தேதி நடந்த போட்டியில் ஷகிப் அல்-ஹசன் ஆட்டநாயகன் விருது பெற்றதும் வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். அதைத்தொடர்ந்து அனுப்பிய ஒரு செய்தியில், ‘இந்த தொடரில் நாம் இணைந்து பணியாற்றலாமா? அல்லது ஐ.பி.எல். போட்டி வரை காத்திருக்கவா?’ என்று கேட்டுள்ளார். இதில் பணியாற்றலாமா என்ற வார்த்தை அணி குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் என்று அர்த்தமாம். அதன் பிறகு ஜனவரி 23-ந் தேதி ஷகிப் அல்-ஹசனுக்கு அனுப்பிய குறுந்தகவலில், ‘சகோதரா இந்த தொடரில் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கேட்டுள்ளார்.

2018-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடிய போதும் ஷகிப் அல்-ஹசனுக்கு தூண்டில் போட்டுள்ளார். அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு வீரர் பெயரை குறிப்பிட்டு அவர் களம் இறங்குவாரா? என்று கேட்டு இருக்கிறார். மேலும் பிட்காயின்ஸ், டாலர், வங்கி கணக்கு உள்பட பல விஷயங்கள் குறித்து இருவருக்கும் இடையே உரையாடல் நடந்து இருக்கிறது. நேரில் சந்திக்க வேண்டும் என்று சூதாட்ட தரகர் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். ஆனால் இதில் எந்தவொரு உரையாடலையும் தனது அணி நிர்வாகத்துக்கோ? அல்லது ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினருக்கோ? ஷகிப் அல்-ஹசன் தெரிவிக்கவில்லை. அத்துடன் தனது உரையாடல் பதிவை அழித்து விட்டார். ஆனால் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினரின் விசாரணையின் போது தன்னை சூதாட்ட தரகர் அணுகியதை மறைத்தது உண்மை தான் என்று ஷகிப் அல்-ஹசன் ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம் சூதாட்ட தரகரை சந்திக்கவில்லை என்றும் அவருக்கு தகவல் எதுவும் அளிக்கவில்லை என்றும் மறுத்துள்ளார். 
Tags:    

Similar News