செய்திகள்
டீம் இந்தியா

பயங்கரவாதிகள் மிரட்டல்: விராட் கோலி மற்றும் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு

Published On 2019-10-30 08:40 GMT   |   Update On 2019-10-30 08:40 GMT
பயங்கரவாதிகள் மிரட்டல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்தப் போட்டித் தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் சிலருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.க்கு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கடிதம் ஒன்று வந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து அகில இந்திய லஷ்கர் என்ற பெயரில் வந்துள்ள அந்த கடிதத்தில் விராட் கோலி மற்றும் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) தேசிய புலனாய்வு அமைப்பு அனுப்பி உள்ளது. இதையடுத்து வங்காளதேச தொடரில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தீவிரவாதிகள் பெயரில் வந்த இந்த கடிதம் பொய்யானது என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கடிதம் பொய்யானதாக இருந்தாலும் விராட் கோலிக்கும், அவரது வீட்டுக்கும் டெல்லி போலீசார் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர்.

இதேபோல மற்ற இந்திய வீரர்களுக்கும், வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். போட்டி நடக்கும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News