செய்திகள்
ஈடன்கார்டன் மைதானம்

இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.50

Published On 2019-10-30 13:33 IST   |   Update On 2019-10-30 13:33:00 IST
இந்தியா - வங்காளதேச அணிகள் முதல் பகல் இரவு ஆட்டத்தில் நவம்பர் 22-ம் தேதி மோத உள்ள நிலையில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆட்டம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. இந்திய அணி முதல் முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாட உள்ளது.

கிரிக்கெட் வாரிய தலைவராக சமீபத்தில் பதவி ஏற்ற கங்குலியின் தீவிர முயற்சியால் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் பங்கேற்கிறது.

கொல்கத்தாவில் வழக்கமாக பகல்-இரவு ஆட்டங்கள் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். ஆனால் பனிப்பொலிவு மற்றும் கூட்டத்தினரை கவர்ந்திழுக்க பகல்- இரவு டெஸ்ட் போட்டியை மதியம் 1.30 மணிக்கு தொடங்க வேண்டும் என்று பெங்கால் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது.

இதை கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. இதனால் பகல்-இரவு போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் 68 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டது. அங்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ. 100, ரூ. 150 என டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகளை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்காளதேச அணியும் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நேரில் வந்து பார்க்கிறார்.

வங்காளதேச அணியின் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ‌ஷகிப்அல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2 ஆண்டு தடை விதித்துள்ளது.

சூதாட்ட தரகர்கள் அணுகியதை ஐ.சி.சி.யிடம் தெரிவிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது.

இதையடுத்து வங்காள தேச அணியின் 20 ஓவர் போட்டிக்கு மகமத்துல்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதைபோல் டெஸ்ட் அணிக்கு மொமினூல் ஹக்யூ கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Similar News