செய்திகள்
சவுரவ் கங்குலி

பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வங்காளதேசம் சம்மதம்: கங்குலியின் முயற்சிக்கு வெற்றி

Published On 2019-10-29 18:24 IST   |   Update On 2019-10-29 18:24:00 IST
பிசிசிஐ தலைவர் கங்குலியின் கோரிக்கையை ஏற்று பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வங்காளதேச கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா, பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிராக முதன்முறையாக பகல்-இரவு போட்டியை நடத்தி காட்டியது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது ஒரு போட்டியை பகல்-இரவு போட்டியாக நடத்த ஆஸ்திரேலியா விரும்பியது. ஆனால், இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு தயராகவில்லை என பிசிசிஐ அவர்களது கோரிக்கையை நிராகரித்தது.

தற்போது பிசிசிஐ-யின் தலைவராக பதவி ஏற்றுள்ள கங்குலி, இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் பகல்-இரவு டெஸ்ட் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட விராட் கோலி சம்மதம் தெரிவித்ததாக கங்குலி கூறியிருந்தார்.

இதனால் உடனடியாக வங்காளதேசத்திற்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியை பகல்-இரவு டெஸ்டாக நடத்த இருக்கிறோம். நீங்கள் இந்த டெஸ்டில் விளையாட வேண்டும் என வங்காளதேச கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

உறுதியாக வங்காளதேச கிரிக்கெட் போர்டு இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதற்கிடையில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவை அறிவிக்கி்றோம் என்று வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மாலை பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வங்காளதேசம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

Similar News