செய்திகள்

விராட் கோலி, டோனி அதிரடியால் ஆஸ்திரேலியாவுக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2019-02-27 15:18 GMT   |   Update On 2019-02-27 15:18 GMT
பெங்களூரு டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, டோனியின் அதிரடியால் ஆஸ்திரேலியாவுக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, உமேஷ் யாதவ், மார்கண்டே ஆகியோர் நீக்கப்பட்டு தவான், விஜய் சங்கர் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு ஓவரில் இந்தியா 4 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தது. 4-வது ஓவரில் இந்தியாவுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது.

ஐந்தாவது ஓவரை ரிச்சர்ட்சன் வீசினார். இந்த ஓவரில் கேஎல் ராகுல் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார். கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசினார். இதனால் இந்தியா பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.

7-வது ஓவரை ஜம்பா வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் இந்தியா 8 ரன்கள் சேர்த்தது. 8-வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 61 ரன்கள் எடுத்திருந்தது.

மறுமுனையில் விளையாடிய தவான் 24 பந்தில் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரிஷப் பந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 11 ஓவரில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பந்தை பவுண்டரிக்கு விரட்டினர். இதனால் 14.1 ஓவரில் இந்தியா 100 ரன்னைத் தொட்டது. அதன்பின் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.

15-வது ஓவரில் டோனி ஒரு பவுண்டரியும், விராட் கோலி ஒரு சிக்சருடன் அடிக்க அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. 16-வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள் விளாசினார். ஆடம் ஜம்பா வீசிய 17-வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

18-வது ஓவரை டி'ஆர்கி ஷார்ட் வீசினார். இந்த ஓவரில் எம்எஸ் டோனி இரண்டு இமாலய சிக்ஸ் விளாசியதோடு, ஒரு பவுண்டரியும் அடித்தார். இதனால் இந்தியாவுக்கு இந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. அத்துடன் இந்தியா 150-ஐ தாண்டியது.

19-வது ஓவரில் விராட் கோலி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது.

கடைசி ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் இரண்டு பந்திலும் வைடு மூலம் இரண்டு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் டோனி ஆட்டமிழந்தார். டோனி 23 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி - டோனி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 பந்தில் 100 ரன்கள் குவித்தது.



அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தை விராட் கோலி சிக்சருக்கு தூக்கினார். இதனால் கடைசி ஓவரில் இந்தியா 18 ரன்கள் சேர்க்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

விராட் கோலி 38 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 பந்தில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News