செய்திகள்

பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி

Published On 2019-02-21 08:16 GMT   |   Update On 2019-02-21 08:16 GMT
புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். #SouravGanguly #PulwamaAttack
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களும் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.



உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான சவுரவ் கங்குலி பேசியதாவது:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் மோத வேண்டும். இம்முறை உலக கோப்பையில் இந்தியா ஒரு போட்டியில் விளையாடாமல் போனால், அணிக்கு பெரிய இழப்பு ஏதும் இல்லை.

புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒரு நிகழ்வு ஆகும். இரு நாடுகளுக்கிடையே எவ்வித தொடர்பும் இருத்தல் கூடாது. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி, கால்பந்து போன்ற அனைத்து விளையாட்டு உறவுகளையும் இந்தியா முறிக்க வேண்டும்.

இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியர்கள் கூறும் கருத்துக்கள் சரியானதாகும். உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட தேவையில்லை என கூறும்  இந்தியர்களின் மன உணர்வு நன்றாக புரிகிறது. இது குறித்து அரசு உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.   

இவ்வாறு அவர் பேசினார். #SouravGanguly #PulwamaAttack
Tags:    

Similar News