செய்திகள்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு

Published On 2018-11-24 00:12 GMT   |   Update On 2018-11-24 00:12 GMT
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்துள்ளது. #slvseng #jonnybairstow
கொழும்பு:

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 8-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். முதல் இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் (14 ரன்), ஜென்னிங்ஸ் (13 ரன்) ஆகியோர் சுழற்பந்து வீச்சில் சிக்கினாலும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் கணிசமான பங்களிப்பை அளித்து அணியை நிமிர வைத்தனர்.

3-வது வரிசையில் அடியெடுத்து வைத்த ஜானி பேர்ஸ்டோ, இலங்கை பந்துவீச்சை திறம்பட சமாளித்து தனது 6-வது சதத்தை நிறைவு செய்தார். இலங்கைக்கு எதிராக அவரது 3-வது சதம் இதுவாகும். அவருக்கு கேப்டன் ஜோ ரூட் (46 ரன்), பென் ஸ்டோக்ஸ் (57 ரன்) ஒத்துழைப்பு தந்தனர். அபாரமாக ஆடிய பேர்ஸ்டோ 110 ரன்களில் (186 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) போல்டு ஆனார். ஜோஸ் பட்லர் (16 ரன்), விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் (13 ரன்) இந்த முறை சோபிக்கவில்லை. 

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்துள்ளது. மொயீன் அலி (23 ரன்), அடில் ரஷித் (13 ரன்) களத்தில் உள்ளனர். இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் சன்டகன் 4 விக்கெட்டும், புஷ்பகுமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும். #slvseng #jonnybairstow
Tags:    

Similar News