செய்திகள்

அடுத்த நான்கு டி20-யில் ஏராளமான பரிசோதனைகளை செய்ய இருக்கிறோம் - விராட் கோலி

Published On 2018-06-28 14:29 GMT   |   Update On 2018-06-28 14:29 GMT
அடுத்துவரும் போட்டிகளில் ஏராளமான பரிசோதனைகளை செய்ய இருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #IREvIND
இந்திய கிரிக்கெட் அணி சுமார் இரண்டரை மாத சுற்றுப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இரண்டு டி20 போட்டிகளில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 208 ரன்கள் குவித்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வழக்கமாக 3-வது இடத்தில் இறங்கும் கோலி 6-வது வீரராக களம் இறங்கினார். அவர் இரண்டு பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஆட்டம் நாளை நடைபெறுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த நான்கு போட்டிகளிலும் ஏராளமான பரிசோதனை முயற்சிகளை செய்ய இருக்கிறோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எதிரணிகளுக்கு ஆச்சர்யம் அளிக்க இருக்கிறோம். அதேபோல் மிடில் ஆர்டரில் மாற்றங்கள் செய்த பார்க்க இருக்கிறோம். தொடக்க பேட்ஸ்மேன்களை தவிர்த்து மிடில் ஆர்டரில் ஏராளமான பரிசோதனைகளை செய்து பார்க்க இருக்கிறோம் என்று ஏற்கனவே நாங்கள் சொல்லியிருக்கிறோம். அடுத்த சில டி20-யில் தேவைக்கேற்ப வீரர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளோம்.



சூழ்நிலைக்கு ஏற்ப யாரை களம் இறக்குவது என்று பார்த்து, அதற்கேற்றபடி வீரர்களை களம் இறக்கி எதிரணிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம். இன்று மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தவர்களுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படாது. வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆனால், சர்வதேச போட்டியில் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது அவசியமானது’’ என்றார்.
Tags:    

Similar News