செய்திகள்

அறிமுக டெஸ்டில் 130 ரன்னில் சுருண்டு ஏமாற்றம் அடைந்தது அயர்லாந்து

Published On 2018-05-14 17:04 IST   |   Update On 2018-05-14 17:04:00 IST
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக களம் இறங்கிய அயர்லாந்து பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 130 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. #IREvPAK
அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை கடந்த வருடம் பெற்றது. அதன்பின் முதல் டெஸ்டை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட முடிவு செய்தது. அந்த டெஸ்ட் கடந்த 11-ந்தேதி டப்ளினில் தொடங்கியது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் பாகிஸ்தானை 350 ரன்களுக்கு மேல் தாண்டவிடாமல் பார்த்துக் கொண்டது. ஆல்அவுட் ஆக மனமில்லாத பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னி்ங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் அயர்லாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. கே ஓ'பிரைன் அதிகபட்சமாக 40 ரன்களும், வில்லிசன் அவுட்டாகாமல் 33 ரன்களும், ஸ்டிர்லிங், ராங்கின் தலா 17 ரன்களும் அடிக்க அயர்லாந்து முதல் இன்னிங்சில் 47.2 ஓவர்கள் விளையாடி 130 ரன்னில் ஆல்அவுட் ஆனது.



இந்த நான்கு பேரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ் நான்கு விக்கெட்டும், சதாப் கான் 3 விக்கெட்டும், முகமது அமிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

அயர்லாந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 180 ரன்கள் பின்தங்கி பாலே-ஆன் ஆனது. பாகிஸ்தான் அணியும் பாலோ-ஆன் கொடுக்க அயர்லாந்து தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் அயர்லாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News