செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சுவீடன் வீராங்கனைக்கு முதல் தங்கப்பதக்கம்

Published On 2018-02-11 03:37 IST   |   Update On 2018-02-11 03:37:00 IST
23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கு விளையாட்டில் முதல் தங்கப்பதக்கத்தை சுவீடன் வீராங்கனை சார்லோட் கல்லா தட்டிச்சென்றார். #WinterOlympics #Sweden #CharlotteKalla
பியாங்சாங்:

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில், முதல் தங்கப்பதக்கத்தை சுவீடன் வீராங்கனை சார்லோட் கல்லா தட்டிச்சென்றார்.

பெண்களுக்கான ‘ஸ்கியத்லான்’ என்ற ஒரு வகை பனிச்சறுக்கு பந்தயம் நேற்று நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த சார்லோட் கல்லா 15 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 40 நிமிடம் 44.9 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். 30 வயதான சார்லோட், ஏற்கனவே குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரை விட 7.8 வினாடி பின்தங்கிய நடப்பு சாம்பியன் மரிட் ஜோர்ஜென் (நார்வே) வெள்ளிப்பதக்கமும், கிறிஸ்டா பர்மாகோவ்ஸ்கி (பின்லாந்து) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

படுத்துக் கொண்டே பனிச்சறுக்கக்கூடிய லஜ் வகை போட்டியில் இந்திய வீரர் ஷிவ கேசவன் அடியெடுத்து வைத்தார். இதில் அவர் முதலாவது தகுதி சுற்றில் 36-வது இடத்தையும், 2-வது தகுதி சுற்றில் 31-வது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தார். இன்று நடக்கும் எஞ்சிய இரு தகுதிசுற்றின் முடிவில் பதக்கம் வெல்வது யார் என்பது தெரிய வரும். 36 வயதான ஷிவ கேசவன் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பது இது 6-வது முறை என்பது கவனிக்கத்தக்கது.  #WinterOlympics #Sweden #CharlotteKalla

Similar News