செய்திகள்

ஆஷஸ் கடைசி டெஸ்ட்டில் கவாஜா, ஸ்மித் பொறுப்பான ஆட்டம்: இரண்டாம் நாளில் ஆஸ்திரேலியா 193/2

Published On 2018-01-05 08:13 GMT   |   Update On 2018-01-05 08:13 GMT
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் கவாஜா, ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால், ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்துள்ளது. #Ashes #AUSVENG
சிட்னி:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அலஸ்டைர் குக் 39 ரன்களும், ஸ்டோன்மேன் 24 ரன்களும் எடுத்தனர். வின்ஸ் 25 ரன்னில் வெளியேறினார்.

4-வது விக்கெட் ஜோடியான ஜோ ரூட்- தாவித் மலன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால்  அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜோ ரூட் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து 81.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. தாவித் மலன் 55 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய மலன் 62 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 30, குரன் 39, பிராட் 31 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சைத் தொடங்கியது. துவக்கவீரர் பான்கிராப்ட் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், அதன்பின்னர் இணைந்த வார்னர்-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. அரை சதம் கடந்த வார்னர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.



இதேபோல் அரை சதம் கடந்த கவாஜாவும் சதத்தை நோக்கி நெருங்கினார். மறுமுனையில் கேப்டன் ஸ்மித்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.



இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 91 ரன்களுடனும், ஸ்மித் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News