செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2-வது டி20: 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

Published On 2017-10-27 22:28 GMT   |   Update On 2017-10-27 22:28 GMT
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபுதாபி:

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை, ஒருநாள் தொடரை 0-5 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகாவும், தில்ஷான் முனவீராவும் களமிறங்கினர். முனவீரா 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமாவும், குணதிலகாவும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். சமரவிக்ரமா 32 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். மற்ற வீரர்கள் பாகிஸ்தான் அணியினரின் பந்துவிச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.



இதனால் இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்கள் சேர்த்தது. ஒரு முனையில் நிலைத்துநின்று விளையாடிய சமரவிக்ரமா 51 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் பஹிம் அஷ்ரப் 3 விக்கெட்களும், ஹசன் அலி 2 விக்கெட்களும், ஷதப் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 19-வது ஓவரை வீசிய பஹிம் அஷ்ரப் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் இசுரு உடனா, மகிலா உதவாடே, தசுன் ஷனகா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார்.

அடுத்து 20 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பகர் சமானும், அகமது ஷெசாத்தும் களமிறங்கினர். பகர் சமான் 11 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கியவர்களும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

அகமது ஷெசாத் 27 ரன்களிலும், சோயப் மாலிக் 9 ரன்களிலும், முகமது ஹபீஸ் 14 ரன்களிலும், இமாத் வாசிம் 2 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். சற்று நிலைத்து நின்று விளையாடிய சர்பராஸ் அகமது 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் அணி, 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

இறுதியில் பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷதப் கான் 16 ரன்களுடனும், ஹசன் அலி 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணியின் திசாரா பெரேரா 3 விக்கெட்களும், விகும் சன்ஜெயா, சச்சித் பதிரானா, இசிரு உடானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என பாகிஸ்தான் கைப்பற்றியது. பாகிஸ்தானின் ஷதப் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையேயான 3-வது டி20 போட்டி பாகிஸ்தானின் லாகூர் நகரில் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News