செய்திகள்

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றி பெறும் முனைப்பில் தென் ஆப்ரிக்கா

Published On 2017-10-01 06:01 GMT   |   Update On 2017-10-01 06:01 GMT
வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி  2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 2 டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கடந்த 28-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி சார்பில் எல்கர், ஆம்லா ஆகியோர் சதமடித்தனர். ஒரு ரன்னில் எல்கர் இரட்டை சதத்தை தவறவிட்டார்.

இதைதொடர்ந்து 146 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 496 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்ரிக்க அணி டிக்ளேர் செய்தது. வங்காளதேசம் சார்பில் முஸ்தபிகுர் ரகுமான் மற்றும் ஷ்பியுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு
விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. மோமினுல் ஹக் மற்றும் மொகமதுல்லாவை தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் 89.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் கேசவ் மகாரஜ் 3 விக்கெட்டும், மார்கல், ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைதொடர்ந்து, தென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 15. 5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ள நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர இறுதியில் ஆம்லா 17 ரன்களுடனும், டெம்பா பவுமா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்க அணி வங்காளதேசத்தை விட 230 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாள் மீதியுள்ள நிலையில் தென் ஆப்ரிக்க அணி போட்டியை வெல்லும் நோக்கில் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபடும் என்றே தெரிகிறது.
Tags:    

Similar News