செய்திகள்

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 233 ரன்னில் ஆல்அவுட்: தெ.ஆ. வெற்றிக்கு 331 ரன்கள் இலக்கு

Published On 2017-07-09 19:30 IST   |   Update On 2017-07-09 19:30:00 IST
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கில் 458 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 97 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. குக் 59 ரன்னுடனும், பேலன்ஸ் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பான வகையில் பந்து வீசினார்கள். இதனால் குக் மேலும் 10 ரன்கள் எடுத்து 69 ரன்னிலும், பேலன்ஸ் மேலும் 12 ரன்கள் எடுத்து 34 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து வந்த முதல் இன்னிங்சில் 190 ரன்கள் குவித்த ரூட் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (1), மொயீன் அலி (7), டவ்சன் (0), பிராட் (0) அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணி 182 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.


மகாராஜ் பந்தில் போல்டாகிய ஜோ ரூட்


9-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் வுட் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாட, வுட் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். வுட் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க, பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்து இங்கிலாந்தை அணியை 200 ரன்கள் தாண்டச் செய்தார்.


ரபாடா வீசிய புல்டாஸ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த டவ்சன்

கடைசி விக்கெட்டாக பேர்ஸ்டோவ் அவுட்டாக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 233 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பேர்ஸ்டோவ் 51 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்கல், ரபாடா தலா மூன்று விக்கெட்டுக்களும், மகாராஜ் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினர்.


2-வது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய மகாராஜ்

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 97 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், 2-வது இன்னிங்சையும் சேர்த்து 330 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

4-வது நாளான இன்று இன்னும் 50 ஓவர்கள் மீதமுள்ளது. நாளை கடைசி நாளும் உள்ளது. தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் லார்ட்ஸ் மைதானம் ஐந்தாவது நாள் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News