செய்திகள்

கேப்டனாக அறிமுகமான போட்டியில் சதம் அடித்து ஜோ ரூட் சாதனை

Published On 2017-07-06 22:38 IST   |   Update On 2017-07-06 22:38:00 IST
கேப்டனாக அறிமுகமான போட்டியில் சதம் அடித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ஜோ ரூட். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த குக் ராஜினாமா செய்ததன் காரணமாக ஜோ ரூட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக் 3 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 8 ரன்னிலும், அதன்பின் வந்த பேலன்ஸ் 20 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 10 ரன்னிலும் வெளியேறினார்கள்.



இதனால் இங்கிலாந்து அணி 76 ரன்கள் எடுப்பதற்குள் 4 நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடினார்கள். பென் ஸ்டோக்ஸ் 108 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது.

அடுத்து ஜோ ரூட் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 150 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். இதன் மூலம் கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தற்போதைய சிறந்த வீரர்களான விராட் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஆகியோரும் கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே சதம் அடித்துள்ளனர்.

Similar News