செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: 317 பந்திற்குப் பிறகு விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள்

Published On 2017-06-12 16:50 IST   |   Update On 2017-06-12 16:50:00 IST
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 317 பந்திற்குப் பிறகு இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றிய அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் இன்றைய போட்டியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது.

இந்தியா 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 321 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, 48.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பந்து எடுபடாமல் போனது. இங்கிலாந்து ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இருக்கும். ஆனால் தற்போதைய சாம்பியன்ஸ் டிராபில் தொடரில் பந்து ஸ்விங் ஆகவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்த திணறி வருகிறார்கள்.

குறிப்பாக 2-வது பந்து வீசும் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு மிகச் சிரமமாக உள்ளது. இலங்கைக்கு எதிராக இந்தியா பந்து வீசும்போது 5-வது ஓவரின் 4-வது பந்தில் புவனேஸ்வர் குமார் பந்தில் டிக்வெல்லா ஆட்டம் இழந்தார். அதன்பின் 49-வது ஓவர் 4-வது பந்து வரை இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. குணதிலகா (76), குசால் மெண்டிஸ் (89) ஆகியோர் ரன்அவுட் ஆனார்கள். பெரேரா காயம் காரணமாக வெளியேறினார். 44 ஓவர்களில் (சுமார் 264 பந்துகள்) இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்தவில்லை.

நேற்று தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா முதலில் பந்து வீசியது. 17 ஓவர் வரை இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீசவில்லை. 18-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் அம்லா அவுட் ஆனார். தென்ஆப்பிரிக்கா போட்டியில் 104 பந்திற்குப் பிறகுதான் விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதன்மூலம் ஒரு விக்கெட்டை வீழ்த்த இரண்டு போட்டியிலும் சேர்த்து வைடுக்குப் பதிலாக வீசப்படும் பந்துகளையும் சேர்த்து 317 பந்துகளுக்குப் பிறகு இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்திய அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

Similar News