செய்திகள்

நடுவர்களின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த ரோகித் சர்மாவுக்கு 50 சதவிகிதம் அபராதம்

Published On 2017-04-25 07:34 GMT   |   Update On 2017-04-25 07:34 GMT
நடுவரின் தீர்ப்புக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி மும்பையை வீழ்த்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். கடைசி ஓவரை புனே வீரர் உனத்கண்ட் வீசினார். முதல் பந்தில் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உனத்கண்ட் வீசிய இரண்டாவது பந்து வைடாக சென்றது. ஆனால், இந்த பந்தை கள நடுவர்கள் வைடு என அறிவிக்கவில்லை.

நடுவர்களின் செயலால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா ஆவேசமாக இரண்டு நடுவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரோகித் சர்மாவின் இந்த செயல் போட்டி விதிமுறைகளை மீறிய செயல் என தெரிவித்துள்ள ஐ.பி.எல் நிர்வாகம், அந்த போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

Similar News