செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஆட்டநாயகன் ரஷித்கான்

Published On 2017-04-10 03:48 GMT   |   Update On 2017-04-10 03:48 GMT
தனது மதிப்பை நிரூபிக்கும் வகையில் ஆடும் ரஷித்கான் நேற்றைய குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபாயகரமான பந்து வீச்சால் குஜராத்தை கலங்கடித்த அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
ஐதராபாத்:

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்சும், நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.



ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 வயதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், லெக்ஸ்பின் வீசக்கூடியவர். ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்ட அவரை அந்த நாட்டு வீரர்கள் ‘மில்லியன் டாலர் பேபி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

தனது மதிப்பை நிரூபிக்கும் வகையில் ஆடும் ரஷித்கான் நேற்றைய குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பிஞ்ச் மூன்று பேரையும் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றினார்.

அதாவது அவரது பந்து வீச்சு எந்த மாதிரி வருகிறது என்பதை துல்லியமாக கணிக்க முடியாமல் மூன்று பேரும் எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார்கள். குஜராத்தை கலங்கடித்த அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

Similar News