செய்திகள்

இந்திய அணி பயிற்சியாளரா? ஐ.பி.எல். ஆலோசகரா?: தவிப்புக்குள்ளான ராகுல் டிராவிட்

Published On 2017-03-25 14:23 GMT   |   Update On 2017-03-25 14:23 GMT
உச்சநீதிமன்ற உத்தரவை பி.சி.சி.ஐ. அமல்படுத்த இருப்பதால் பிசிசிஐ அல்லது ஐ.பி.எல். ஆகிய இரண்டில் ஒன்றில் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளார் டிராவிட்.
பிசிசிஐ நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தனது பரிந்துரைகளை சமர்பித்தது. இதில் பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதில் முக்கியமானது இரட்டை ஆதாயப் பதவியாகும். பிசிசிஐயில் தொடர்பில் இருக்கும் நபர் மற்றொரு துறையில் செயல்படக்கூடாது. தற்போது இந்த கொள்கை டிராவிட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணி மற்றும் இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். அதேசமயத்தில் பிசிசிஐ நடத்தும் ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார்.

இது இரட்டை ஆதாயப் பதவி கொள்கையின் கீழ் வருகிறது. இதனால் அவர் பிசிசிஐ அல்லது ஐ.பி.எல். ஆகியவற்றில் ஒன்றை விட வேண்டிய நிலைமையில் உள்ளார்.

அவருடைய பயிற்சியாளர் பதவிக் காலம் 10 மாதம் முடிவடைந்துள்ளது. இரண்டு மாதங்கள் இன்னும் இருந்தாலும், ஏற்கனவே டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட அனுமதி கேட்டிருந்தார். அதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.



அடுத்த ஓராண்டுக்கு டிராவிட்டுடன் ஒப்பந்தம் போட பிசிசிஐ தயாராக உள்ளது. ஐ.பி.எல். தொடரில் அவருக்கு கொடுக்கப்படும் பணத்தை சேர்த்தும் வழங்க தயாராக இருப்பதாகவும் பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் எதை ஏற்றுக் கொள்வது என்ற இக்கட்டான நிலையில் உள்ளார் டிராவிட். இதற்கிடையில் இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் தேர்வு செய்யப்படலாம் என்ற செய்தியும் அடிபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சினை அவருக்கும் மட்டுமல்ல, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர், பிசியோ பாட்ரிக் பர்ஹார்ட் ஆகியோரும் இரட்டை ஆதாய பதவி பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

Similar News