செய்திகள்

ஐ.பி.எல். ஏலத்தில் 14 தமிழக வீரர்கள்

Published On 2017-02-15 05:19 GMT   |   Update On 2017-02-15 05:19 GMT
10-வது 'இந்தியன் பிரீமியர் லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்கள் அபினவ் முகுந்த், ஆர்.சந்த் உள்பட 14 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பெங்களூர்:

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5-ந் தேதி முதல் மே 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 20-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது.

இந்த ஐ.பி.எல். ஏலத்தில் இடம் பெறப்போகும் வீரர்கள் இறுதிப் பட்டியலை ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு வெளியிட்டது. 799 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதை இறுதி செய்து 351 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் 122 பேர் இந்தியர்கள். 229 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

351 வீரர்களில் இருந்து 76 பேர் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதில் அதிகபட்சமாக 28 வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட வேண்டும்.

இந்த ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்த், ஆர்.சந்த் உள்பட 14 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக வீரர்களில் அபினவ் முகுந்துக்கு அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஆர்.சந்துக்கு ரூ. 20 லட்சம் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற தமிழக வீரர்களின் பாபா இந்திரஜித், டி.நடராஜன், ஜெகதீசன், எம்.அஸ்வின், விக்னேஷ், சாய்கிஷோர், ரகில்ஷா, அஸ்வின் கிரைஸ்ட், எம்.முகமது, ஹஷிங்டன், சுந்தர், கவுசிக் காந்தி, சஞ்சய் யாதவ் ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Similar News