செய்திகள்
பட்டம் வென்ற அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கிய போது எடுத்தபடம்.

மாவட்ட ஜூனியர் தடகளப்போட்டி: அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

Published On 2017-02-11 02:53 GMT   |   Update On 2017-02-11 02:53 GMT
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப்போட்டியில், அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப்போட்டி, எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை அத்லடிக் கிளப் சார்பில், நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 4,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். 10, 12, 14, 16, 19 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம் வருமாறு:-

10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சஸ்வி சர்வதேச பள்ளி மாணவர் லூகோ பத்மஜ், அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி ஆகியோரும், 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆர்.கே.வி. பள்ளி மாணவர் காசிநாத், சவறா வித்யாலயா பள்ளி மாணவி திவ்யாஸ்ரீ ஆகியோரும் தனிநபர் சாம்பியன்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கிரகாம் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் சத்திய நாராயணன், சி.எஸ்.அகாடமி பள்ளி மாணவி சவுமியா ஆகியோரும், 16 வயது பிரிவில் மணி மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரசன்னகுமார், அல்வேர்னியா பள்ளி மாணவி சோனியா ஆகியோரும் தனிநபர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் ஜோயல் லோகேஷ், அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாலினி தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். மாணவர் பிரிவில் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியும், சஸ்வி சர்வதேச பள்ளியும் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டன. மாணவிகள் பிரிவு மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தட்டி சென்றனர்.

போட்டிகளை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் எட்வின் ஜோ கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவன நிர்வாகி எம்.பி.பாலதண்டாயுதபாணி, இயக்குனர் வி.பி.அருணாச்சலம், உதவி இயக்குனர் ஜெ.பாமினி, துணை முதல்வர் விவேகானந்தன், கோவை அத்லடிக் கிளப் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News