செய்திகள்

தேர்வுக்குழு உத்தரவால் டோனி விலகினார் - பரபரப்பு தகவல்

Published On 2017-01-09 07:51 GMT   |   Update On 2017-01-09 07:51 GMT
தேர்வுக்குழு உத்தரவால் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியதாக வெளியான தகவலால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான வரலாற்று சிறப்புமிக்க கேப்டன் மகேந்திரசிங் டோனி. இரண்டு உலக கோப்பையை வென்று (2007-ம் ஆண்டு 20 ஓவர், 2011-ம் ஆண்டு 50 ஓவர்) இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த டோனி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இதனால் விராட்கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக டோனி தொடர்ந்து பணியாற்றினார்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சிகரமான முடிவை டோனி எடுத்தார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அறிவித்தார்.

இதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் அணியில் இடம் பெற்றார். விராட்கோலி 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டன் ஆனார்.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியது அவரது சொந்த முடிவு இல்லை என்றும் பதவி விலகுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றும் பரபரப்பான தகவலை ஆங்கில பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.

இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோனி தானாக முன் வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கேட்டுக்கொண்டதன் பேரில் விலகினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் -குஜராத் மோதிய அரைஇறுதி ஆட்டம் கடந்த வாரம் நாக்பூரில் நடந்தது. டோனி தனது மாநில அணியை உற்சாகப்படுத்துவதற்காக வீரர்களுடன் இருந்தார்.

அப்போது தேர்வுகுழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அங்கு சென்று டோனியை சந்தித்தார். அப்போது கேப்டன் பதவி குறித்து அவரிடம் தேர்வு குழு தலைவர் விவாதித்தார்.

2019 உலக கோப்பை நடக்கும் போது டோனிக்கு 39 வயதாகிவிடும். இதனால் விராட் கோலியை கேப்டனாக்குவதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே தேர்வு குழு தீவிரம் காட்டி வந்தது.

புதிய தேர்வு குழு கடந்த செப்டம்பர் 21-ந்தேதி பதவியேற்றது. அப்போதே 2019 உலக கோப்பை பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டது. டெஸ்டில் மிகவும் சிறப்பாக செயல்படும் விராட் கோலியை ஒருநாள் போட்டிக்கும் கேப்டன் ஆக்கிவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் அவரது ஆக்ரோ‌ஷம் தேர்வு குழுவை கவர்ந்து இருந்தது.

கேப்டன் பதவியால் டோனிக்கு உள்ள நெருக்கடி பற்றியும் இந்த சந்திப்பின் போது பிரசாத் எடுத்து உரைத்தார். இதனால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று தெரிவித்தார்.

தேர்வு குழு தலைவரின் இந்த உத்தரவால் தான் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வீரர்கள் தேர்வுக்கு முன்பு பதவி விலகுமாறு அவரிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இதனால் அவர் 4-ந்தேதியே தனது பதவி விலகல் முடிவை அறிவித்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டார்.

டோனி தானாக கேப்டன் பதவியை விட்டு செல்லவில்லை. கட்டாயப்படுத்தி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக வெளியான இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் வேதனையையும், ஏமாற்றத்தையும் அளித்து உள்ளது.

Similar News