செய்திகள்

இந்தியா-இங்கிலாந்து மோதல்: பரபரப்பான கட்டத்தில் சேப்பாக்கம் டெஸ்ட்

Published On 2016-12-20 11:31 IST   |   Update On 2016-12-20 11:31:00 IST
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இப்போட்டி பரபரப்புடன் காணப்படுகிறது.
சென்னை:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. இதற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுத்தது. 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தின் ஸ்கோரை விட 282 ரன் கூடுதலாகும்.

கருண்நாயர் டிரிபிள் சதம் அடித்து 2-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவர் 303 ரன்னும் (அவுட்இல்லை), லோகேஷ் ராகுல் 199 ரன்னும் எடுத்தனர். ஸ்டூவர்ட் பிராட், டாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

282 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன் எடுத்து இருந்தது. ஜென்னிங்ஸ் 12 ரன்னும், தேயின் கூக் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 270 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.

ஆட்டத்தை ‘டிரா’ செய்யும் நோக்கில் விளையாடினார்கள். அதே நேரத்தில் இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் வேட்கையில் பந்து வீசினார்கள். கடைசி நாள் ஆட்டம் என்பதால் பரபரப்புடன் காணப்பட்டது.

இங்கிலாந்து வீரர்கள் நிதானமாக விளையாடி வருவதால் இந்த டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் 5 டெஸ்ட் கொண்ட இந்த தொடரை இந்திய 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது.

Similar News