செய்திகள்

சேப்பாக்கம் டெஸ்டில் கருண் நாயர் அதிரடி சதம்: உணவு இடைவேளை வரை 463/5

Published On 2016-12-19 12:26 IST   |   Update On 2016-12-19 12:26:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 463 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 122 ரன்களுடனும், அஷ்வின் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சென்னை:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. மொயின் அலி 146 ரன் எடுத்தார். ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் 199 ரன் குவித்தார். கருண் நாயர் 71 ரன்னிலும், முரளி விஜய் 17 ரன்னிலும், ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 86 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் பிராட் பந்தில் கருண் நாயர் பவுண்டரி அடித்தார். அதற்கு அடுத்த ஓவரில் இந்தியா 400-வது ரன்னை குவித்தது. 111.2-வது ஓவரில் இந்த ரன்னை தொட்டது. கருண் நாயரும், முரளி விஜய்யும் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

கருண் நாயர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி மூலம் அவர் 100 ரன்னை தொட்டார். 185 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் சதத்தை பதிவு செய்தார்.

3-வது டெஸ்டில் விளையாடும் கருண் நாயர் தனது முதல் சதத்தை எடுத்தார். சேப்பாக்கம் மைதானம் அவருக்கு முதல் செஞ்சூரி எடுக்க உதவியாக அமைந்தது. இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் மொகாலி டெஸ்டில் 4 ரன்னிலும், மும்பை டெஸ்டில் 13 ரன்னிலும் வெளியேறினார்.

உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 463 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 122 ரன்களுடனும், அஷ்வின் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News