செய்திகள்

தேசிய அளவிலான தடகளப்போட்டிக்கு புதுக்கோட்டை பள்ளி மாணவி தேர்வு - கலெக்டர்

Published On 2016-12-16 13:28 IST   |   Update On 2016-12-16 13:28:00 IST
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தடகளப்போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தடகளப்போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து கூறியதாவது:-

மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் விருதுநகர் மாவட்டம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 04.12.2016 முதல் 05.12.2016 வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சென்ற திருவப்பூர் நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி கே.வனிதா கலந்து கொண்டு 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேபோன்று வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.சங்கீதா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மேலும் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற மாணவி கே.வனிதா அகில இந்திய அளவில் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இம்மாணவி தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், தலைமையாசிரியர் மணவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News