செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாளில் 288/3

Published On 2016-12-15 10:37 GMT   |   Update On 2016-12-15 10:37 GMT
பிரிஸ்பேனில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பகல் - இரவு டெஸ்டாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி ஆஸ்திரேலியா அணியின் ரென்சா, டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் அணியின் மொகமது ஆமிர், ரஹத் அலி ஆகியோரின் பந்து வீச்சில் எக்காரணத்தைக் கொண்டும் அவுட்டாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இதனால் ஆஸ்திரேலியா 17.3 ஓவரில்தான் 50 ரன்னைத் தொட்டது. ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருக்கும்போது வார்னர் 32 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஆமிர் பந்தில் எல்.பி.டபி்ள்யூ ஆனார்.



அடுத்து வந்த கவாஜாவை 4 ரன்னில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் யாசீர் ஷா. 3-வது விக்கெட்டுக்கு ரென்சா உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. அணியின் ஸ்கோர் 151 ரன்னாக இருக்கும்போது ரென்சா 71 ரன்கள் எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.



அடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த ஸ்மித் அதை சதமாக மாற்ற முயற்சி செய்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. மொகமது ஆமிர் வீசிய ஆட்டத்தின் 87-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 16-வது சதத்தை பூர்த்தி செய்தார்.



மறுமுனையில் விளையாடிய ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 110 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 64 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News