செய்திகள்

அதிக அளவில் நெருக்கடி இருந்தது: 136 ரன் குவித்த முரளி விஜய் கூறுகிறார்

Published On 2016-12-10 20:03 IST   |   Update On 2016-12-10 20:03:00 IST
மீண்டும் திறமையை வெளிப்படுத்த மிகப்பெரிய நெருக்கடி இருந்தது என்று மும்பை மைதானத்தில் 136 ரன்கள் குவித்த முரளி விஜய் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை 400 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்கள் குவித்துள்ளது.

இதற்கு தொடக்க வீரரான முரளி விஜய்யும் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 136 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோருக்கு முதுகெலும்பாக இருந்தார்.

இந்த தொடர் தொடங்கும்போது ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சதம் (126) அடித்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 20 ரன்னும், 2-வது இன்னிங்சில் 3 ரன்னும் எடுத்தார். மொகாலியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 12 ரன் எடுத்தார். இரண்டாம் இன்னிங்சில் ரன் எடுக்கவில்லை.

கடைசி இரண்டு போட்டியிலும் வேகப்பந்தின் ஷாட்பிட்ச் பவுன்சரில்தான் அவுட்ஆனார். இதனால் ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்ள முரளி விஜய் திணறுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று சதம் அடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில் ‘‘என்னுடைய திறமையை மீண்டும் வெளிப்படுத்தி சதம் அடிக்க நெருக்கடி இருந்தது. நெருக்கடிக்கு மத்தியில் சதம் அடித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. நேற்றைய ஆட்டம் முடிந்த பின் என்னுடைய அடிப்படை திறமைகள் மூலம் பயிற்சியில் ஈடுபட்டேன். அதனால் இன்று வலிமையுடன் திரும்பி வந்தேன்.

நான் ஷாட்பிட்ச் பந்தில் ஆட்டம் இழக்கிறேன் என்ற பேச்சு அதிக அளவில் இருந்தது. நான் உறுதியுடன், என்னுடைய மனநிலையை எளிமையாக வைத்துக் கொண்டு மும்பை டெஸ்டில் களம் இறங்கினேன். அடிப்படை விசயம் என்னவென்றால் ஷாட்பிட்ச் பந்தில் அவுட்டானதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை.

எங்களுக்குள்ளாகவே நாங்கள் உத்வேகம் அடைந்தோம். அந்த வகையில் விராட் கோலி தனது ஆட்டத்தை சிறந்த வகையில் தொடங்கினார். அதேபோல் மாலையில் சிறந்த வகையில் ஆட்டத்தை முடித்தார்.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் நம்முடைய பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புஜாரா மற்றும் விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது’’ என்றார்.

Similar News