செய்திகள்

கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனா வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன்

Published On 2016-12-04 15:34 IST   |   Update On 2016-12-04 15:34:00 IST
ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்தார்.
‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் பரம எதிரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவு மைதானத்தில் ‘லா லிகா’ லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியை நேரில் பார்க்க 98 ஆயிரத்து 485 ரசிகர்கள் வந்திருந்தனர்.

சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பார்சிலோனா அணி களம் இறங்கியது. அதே சமயத்தில் 6 புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் ரியல் மாட்ரிட் அணி எந்தவிதத்திலும் புள்ளிகளை விட்டு கொடுக்கக் கூடாது என்ற வகையில் களம் இறங்கின.



ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள். ஆனால், பாதுகாப்பு வீரர்களால் அவர்களால் எளிதில் கோல் அடிக்க முடியவில்லை. ரியல் மாட்ரிட் அணியின் இஸ்கோ 13-வது நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்றார். 28-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியி்ன் முன்னணி வீரர் நெய்மர் மஞ்சள் அட்டை பெற்றார்.

முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரம் தொடங்கியதும் பார்சிலோனா அணியின் கை ஓங்கியது. 53-வது நிமிடத்தில் நெய்மர் அடித்த ‘ப்ரீ ஹிக்’ பந்தை சுவாரஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது.



அதன்பின் பார்சிலோனா தடுப்பு ஆட்டத்தில் கவனத்தை செலுத்தியது. இதனால் 75-வது நிமிடத்தில் சுவாரஸ், 83-வது நிமிடத்தில் செர்ஜியோ பஸ்குயட்ஸ், 90-வது நிமிடத்தில் சேவியர் மாஸ்செரானோ ஆகியோர் மஞ்சள் அட்டை பெற்றனர்.

ஆட்டம் 90-வது நிமிடத்தை நெறுங்கி கொண்டிருந்தது. அப்போது பார்சிலோனாதான் வெற்றி பெறும் என்று ரசிகளர் எண்ணி கொண்டிருந்தார்கள். ஆனால் சரியாக 90-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் லூகா மோட்ரிக் ப்ரீ ஹிக் மூலம் பந்தை தூக்கி அடித்தார். அதை அந்த அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.

இதனால் 1-1 என போட்டி சமநிலையில் முடிந்தது. ஆகவே, ரியல் மாட்ரிட் 6 புள்ளிகள் முன்னிலையுடன் லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்து நிறுத்தினார் ரமோஸ்.

ஒட்டு மொத்தமாக பார்சிலோனா வசம் 55 சதவீதமும், ரியல் மாட்ரிட் வசம் 45 சதவீதமும் பந்து ஆக்கிரமித்திருந்தது. ரியல் மாட்ரிட் அணிக்கு 7 கார்னர், பார்சிலோனாவிற்கு 5 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன.

Similar News