செய்திகள்

டி.என்.பி.எல். முதல் அரையிறுதி: திண்டுக்கல்லுக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தூத்துக்குடி

Published On 2016-09-16 14:59 GMT   |   Update On 2016-09-16 14:59 GMT
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. லீக் தொடரின் முடிவில் 2-வது இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், 3-வது இடம் பிடித்த ஆல்பர்ட் டுட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற தூத்துக்குடி அணி பேட்டிங் தேர்வு செய்தது. துலீப் தொடரில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் இடம்பிடித்தார். அந்த அணியின் காந்தி, அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். காந்தி 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் முறுமுனையில் முகுந்த் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அடுத்த வந்த நாதன் 11 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு முகுந்த் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். முகுந்த் 35 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதத்தை கடந்தார்.

14-வது ஓவரை ரகுநாதன் வீசினார். இந்த ஓவரில் தூத்துக்குடிக்கு மூன்று பவுண்டரி கிடைத்தது. 17-வது ஒவரை சஞ்சய் வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 31 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 48 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து சுப்ரமணியன் ஆனந்த் களம் இறங்கினார். அரைசதம் கடந்த முகுந்த் சிறப்பாக விளையாடி அதை சதமாக மாற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 55 பந்தில் 91 ரன்கள் குவித்து 18.3-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். அடுத்த பந்தில் சுப்ரமணியன் ஆனந்த் ஆட்டம் இழந்தார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த வாஷ்ங்டன் சுந்தர் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். 19-வது ஓவரை வீசிய சன்னி குமார் ஓரே ஓவரில் 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

கடைசி ஓவரில் தூத்துக்குடி அணி 10 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இதனால் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Similar News